ஆரோக்கிய பெட்டகம்: மிளகு சீரகம் - courtesy dinakaran

அனைத்து வீடுகளின் அஞ்சறைப் பெட்டியிலும் அவசியம் இருக்க வேண்டியவை இவை இரண்டும். சாதாரண சமையலில் கூட இவை இரண்டும் சேரும் போது, அதன் ருசியும் மணமும் பன்மடங்கு கூடுவதை உணரலாம். ‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என்று மிளகுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறது ஒரு பழமொழி.‘‘எட்டுத் திப்பிலி ஈரைந்து சீரகம் கட்டுத் தேனில் கலந்துண்ண விக்கலும் விட்டுப் போகுமே... விடாவிடில் நான் தேரனும் அல்லவே’ என்று சீரகத்தின் புகழ் பாடுகிறது சித்தர் பாடலொன்று. அத்தகைய சிறப்புடையவை மிளகும் சீரகமும்!
என்ன இருக்கிறது? (100 கிராமில்)

மிளகு

புரதம் - 11. 5 கிராம்,
கொழுப்பு - 6.8 கிராம்,
தாதுச்சத்துகள் - 4.4 கிராம்,
நார்ச்சத்து - 49.2 கிராம்,
ஆற்றல் (கிலோ கலோரிகளில்) - 304,
கால்சியம் - 460 மி.கி.,
இரும்புச் சத்து - 12.4 கிராம்

சீரகம்

புரதம் - 18.7 கிராம்,
கொழுப்பு - 15 கிராம்,
தாதுச்சத்துகள் - 5.8 கிராம்,
நார்ச்சத்து - 12 கிராம்,
ஆற்றல் (கிலோ கலோரிகளில்) - 356,
கால்சியம் - 1,080 மி.கி.,
இரும்புச் சத்து - 11.7 கிராம்


மிளகு

அதிக அளவு வியர்வையைத் தந்து, உடலிலுள்ள நச்சுப் பொருட்களை நீக்கக்கூடிய சக்தி கொண்டது. வயிறு மற்றும் குடல் புண்களை ஆற்றும். அல்சர் பிரச்னை உள்ளவர்களுக்கு காரத்துக்கு மிளகு சேர்க்க அறிவுறுத்தப்படுவதன் பின்னணி இதுதான். மிளகு வீக்கத்தைக் குறைக்கும். வாய்ப்புண்களையும் ஆற்றும். அம்மை வந்தவர்களுக்கு சமையலில் மிளகுதான் பிரதானமாகச் சேர்க்கப்படும்.

நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு அவதிப்படுவோருக்கும் மிளகு அருமையான மருந்து. நாள்பட்ட இருமல், அதனால் ஏற்படும் தொண்டை வலிக்கும் மிளகு மருந்தாகும். முன்பு குழந்தைகளுக்கு வயிற்றுப்பூச்சிகள் அழிய கை மருந்துகள் கொடுக்கும் பழக்கம் இருந்தது. இன்று அதைப் பற்றியெல்லாம் யாரும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. பூச்சி மருந்து கொடுப்பதை மெனக்கெட்டு செய்ய நேரமில்லாதவர்கள், மிளகு அதிகம் சேர்த்த சூப் வைத்துக் கொடுத்தாலே, வயிற்றுப்பூச்சிகள் செத்துவிடும். இதைப் பெரியவர்களும் எடுத்துக் கொள்ளலாம்.

மிளகு மிகச்சிறந்த ஆன்ட்டிபயாடிக். அடிபட்டு, ரத்தம் கசிந்தால், அந்த இடத்தில் சிறிது மிளகுப்பொடி வைத்து அழுத்தினால் கசிவு உடனே நிற்கும்.
மிளகில் வெள்ளை மிளகு, கருப்பு மிளகு என இரண்டு உண்டு. ஃப்ரைட் ரைஸ் போன்ற சில உணவுகளுக்கு வெள்ளை மிளகு உபயோகிக்கிறோம். உணவின் நிறம் மாறாமலிருக்க வேண்டும் என்பதே காரணம். வெள்ளை மிளகு என்பது தோல் நீக்கப்பட்டது... அவ்வளவுதான்! உண்மையான சுவை மற்றும் ஆரோக்கியம் எதில்? அவ்வப்போது தேவைக்கேற்ப கரகரப்பாகப் பொடித்து உபயோகிக்கிற கருப்பு மிளகில்தான்!

அந்தந்த வேளைத் தேவைக்கு கொஞ்சமாக இடித்து உபயோகித்தால், அதன் மணமும் பலனும் முழுமையாகக் கிடைக்கும். பொங்கல் உள்ளிட்ட எந்த உணவில் மிளகு சேர்த்தாலும் அதைத் தனியே எடுத்து வைப்பது குழந்தைகளின் வழக்கம். மிளகை முழுதாகஉபயோகிப்பதற்குப் பதில், தட்டி, தாளித்துச் சேர்த்தால் இந்தப் பிரச்னை இருக்காது. காய்கறி, பழங்கள் என எதில் சாலட் செய்து கொடுத்தாலும், அதில் மிளகுத்தூள் தூவிக் கொடுத்துக் குழந்தைகளை சாப்பிடப் பழக்கலாம்.

சீரகம்

‘சீர் பிளஸ் அகம்’தான் சீரகம். அதாவது, உடலின் உள் உறுப்புகளை சீராக்கக் கூடியது. மிளகு இருக்கும் இடத்தில் சீரகமும் கட்டாயம் இடம்பெறும். மேற்கத்திய உணவுகளில் மிளகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். நம்மூரில் மஞ்சள்தூளுக்கு அடுத்து, நாம் அதிகம் உபயோகிக்கிற ஒன்று சீரகம். கடுகைப் போலவே சீரகமும் நச்சுத்தன்மையை எடுக்கும் குணம் கொண்டது. சீரகம் ரத்தத்தை சுத்திகரிக்கக் கூடியது.  ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைத்து, ரத்த அழுத்தத்தை சரியான நிலையில் வைக்கக் கூடியது.

இரும்புச்சத்தை அதிகரிக்க வல்லது. ரத்தத்தின் அடர்த்தி ஒரே அளவில் இருக்கச் செய்ய உதவக்கூடியது. ரத்தம் உறைவதைத் தடுக்கும் சக்தி வாய்ந்தது. மிளகைப் போலவே சீரகமும் மார்பகச் சளியைக் கரைக்க வல்லது. வீசிங் எனப்படுகிற சுவாசத் திணறல் பிரச்னைக்கும் சீரகம் மருந்தாகப் பயன்படும். சீரகத்தை வெறுமனே, லேசாக வறுத்துப் பொடித்து, அதில் கஷாயம் வைத்துக் கொடுத்தால், வீசிங் தீவிரம் மட்டுப்படும். நரம்புத்தளர்ச்சி உள்ளவர்களுக்கு சீரகத்தூளுடன் தேன் கலந்து கொடுப்பது வழக்கம்.

கேரள மக்களுக்கு சீரகம் சேர்க்காத தண்ணீர் ஒரு வாய் கூட இறங்காது. சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்த சீரக வெள்ளம்தான் எப்போதும் குடிப்பார்கள். அந்தத் தண்ணீர்தான் அவர்களது சரும அழகுக்கும் அடிப்படை... செரிமானத்துக்கும் நல்லது. கிரீன் டீ மாதிரியே சீரகமும் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடெண்டன்ட். சீரகத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. எனவே, அது பூஞ்சைத் தொற்றுக்கு எதிராகவும் போராடக்கூடியது. சிறுநீரகங்களின் செயல்பாடு சீராக இருக்க உதவுகிறது.

அதன் மூலம் நச்சுப் பொருட்கள் வெளியேறி விடும். வளர்சிதை மாற்றத்துக்கும் சீரகம் பெரிதும் உதவுகிறது. வயிற்றுப்போக்கு மற்றும் ஃபுட் பாய்சன் பிரச்னைகளுக்கு 1 டீஸ்பூன் சீரகத்தையும் அரை டீஸ்பூன் மிளகையும் வெறும் கடாயில் வறுத்துப் பொடித்து, சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு, பொடித்த மிளகு, சீரகம் சேர்த்துப் பிசைந்து ஒரு வாய் சாப்பிட வேண்டும். வாந்தி, பேதி உள்ளிட்ட வயிற்று உபாதைகள் உடனே நிற்கும். செரிமானம் சீராகும்.

ஜீரா புலாவ்

என்னென்ன தேவை?

கோதுமை ரவை - 1 கப், சீரகம் - 2 டீஸ்பூன், வேக வைத்த கார்ன் - கையளவு, சிவப்பு மிளகாய் ஃப்ளேக்ஸ்
அல்லது மிளகாயைப் பொடித்தது - 1 டீஸ்பூன், பட்டை - 1, வெங்காயம் - 1, புதினா - 1 கைப்பிடி, எண்ணெய் அல்லது நெய் - 2 முதல் 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப,

எப்படிச் செய்வது?

கோதுமை ரவையை வெறும் கடாயில் லேசாக வறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, வேக வைத்த கார்ன், சீரகம், சில்லி ஃப்ளேக்ஸ், பட்டை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். 2 கப் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கலந்து, வறுத்து வைத்துள்ள கோதுமை ரவையையும் சேர்த்துக் கிளறி, புதினா சேர்த்து, குக்கரில் 10 நிமிடங்களுக்கு வெயிட் போட்டு வைக்கவும். விசில்
வர வேண்டும் என அவசியமில்லை.

நீரிழிவு கஷாயம்


என்னென்ன தேவை?

சீரகம் - 1 டீஸ்பூன், தனியா - 1 டீஸ்பூன், வெந்தயம் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

மூன்றையும் தனித்தனியாக வறுத்துப் பொடித்து வைத்துக் கொள்ளவும். 1 டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து, முதலில் தனியா, வெந்தயத் தூள் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு சீரகத்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும், மூடி வைத்து வடிகட்டி, ஒவ்வொரு வேளை சாப்பாட்டுக்கு முன்பும் கால் டம்ளர் குடித்துவிட்டு, அரை மணி நேரம் கழித்து சாப்பிட்டால், சர்க்கரையின் அளவு குறையும். ரத்த அழுத்தம் உள்ளவர்களும் குடிக்கலாம்.

மிளகுப் பால் (பெப்பர் மில்க்)


என்னென்ன தேவை?

பால் - 250 மி.லி, மிளகு - 5 கிராம்,  மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, சுக்குத் தூள் - 1 சிட்டிகை, பனங்கற்கண்டு - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?


பாலைக் கொதிக்க வைத்து, அதில் மஞ்சள் தூள், சுக்குத்தூள், தட்டிய மிளகு, பனங்கற்கண்டு சேர்த்து மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கி, வடிகட்டவும்.  இரவு படுக்கப் போகும் முன், இதைக் குடித்தால் தொண்டைப் புண், நாள்பட்ட இருமல், சளி குணமாகும்.
 

----  copyright @ dinakaran -  thanks to arokiya pettagam

No comments:

Post a Comment